இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது
அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது என திருவாரூரில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்:
அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது என திருவாரூரில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
சிறப்பு கிராம சபை கூட்டம்
திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து விவாதிப்பதற்கான தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஒவ்வொரு மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்துவதே கிராமசபை கூட்டத்தின் நோக்கமாகும்.
தமிழகம் முன்மாதிரி மாநிலம்
தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடைய மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படுகிறது. அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி சமத்துவமாக வாழ்வதால் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக திகழ்கிறது. அதனால் தான் எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்தியன் என்று சொல்வதில் பெருமை அடைகிறோம். அதிலும் தமிழன் என்பதில் அதிக பெருமை கொள்வோம். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
உறுதிமொழி
கூட்டத்தில் கிராமவளர்ச்சி, சுகாதாரம், தரமான குடிநீர், தூய்மையை கடைபிடித்தல், சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், தொழில் வளர்ச்சியினை உருவாக்குதல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அதுகுறித்து கிராம மக்களுடன் விவாதிக்கப்பட்டது. முன்னதாக கிராம ஊராட்சி பகுதிகளில் நிலைத்த வளர்ச்சி குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, துணை இயக்குனர் (சுகாதாரம்) ஹேமசந்த் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கார்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் தௌலத்இக்பால், ஊராட்சி செயலாளர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story