வடபாதிமங்கலத்தில் கிளியனூர் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வடபாதிமங்கலத்தில் கிளியனூர் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.
கூத்தாநல்லூர்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வடபாதிமங்கலத்தில் கிளியனூர் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.
கிளியனூர் பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன்பு கிளியனூர்-புனவாசல் இணைப்பு பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த குறுகலான பாலத்தினை கிளியனூர், வடபாதிமங்கலம், புனவாசல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த பாலத்தில் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் சென்று வந்தன.
நாளடைவில் பாலம் பழுதடைந்தது. இதனால் அந்த பாலத்தை பயன்படுத்துவதில் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய அகலமான சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பாதியிலேயே நிறுத்தம்
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய அகலமான சிமெண்டு பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் மேட்டூர் அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பாலம் கட்டும் பணிகள் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டது. எனவே பாலம் கட்டும் பணிகளை, மீண்டும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாலம் கட்டும் பணிகள் தொடங்கின
இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்ட கிளியனூர் பாலம் கட்டும் பணிகளை தொடங்கினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story