சிறப்பு கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதி்ல் எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதி்ல் எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
குடவாசல்
குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய பல்வேறு பணிகள் குறித்தும், வளர்ச்சி குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பாம்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் கஸ்தூரிபாய் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆறுமுகம், திருப்பாம்புரம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி துணைத்தலைவர் ஆயிசாபீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சியில் வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாத நிலை, நலவாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம், குடிநீர் மற்றும் சுகாதாரம் வேலைவாய்ப்புகான பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி உறுப்பினர்கள் ஜெகபர் சாதிக், பாரதிமோகன், பாலசுப்பிரமணியம், மஞ்சுளா முத்தையன், ரேவதிராஜீ மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சீனிவாசன் நன்றி கூறினர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அரிச்சபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர்
சோ.செந்தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதுரா சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வார்டுஉறுப்பினர்கள், கிராமமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கும் மின்சாரத்தினை தடையின்றி வழங்க வேண்டும். மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை தடையின்றி வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்னார்குடி
மன்னார்குடி ஒன்றியம் வடபாதி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா ஸ்டாலின், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி அருகே பெருமாளகரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா தலைமையில் நடந்து. இதில் செல்வராஜ் எம்.பி, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா, துணைத்தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களில் கூறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஊராட்சி மன்ற தலைவருக்கு அவர்கள் அறிவுறுத்தினர். பின்னர் சுற்றுச்சூழலை பேணி காப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story