திருமயம் கோட்டையில் பழமையான பீரங்கியில் காதல் கிறுக்கல்கள் அடையாள சின்னத்தை பராமரிக்க கோரிக்கை


திருமயம் கோட்டையில் பழமையான பீரங்கியில் காதல் கிறுக்கல்கள் அடையாள சின்னத்தை பராமரிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 24 April 2022 11:03 PM IST (Updated: 24 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

திருமயம் கோட்டையில் பழமையான பீரங்கியில் காதல் கிறுக்கல்களை செய்து அலங்கோலமாக காணப்படுகிறது. அடையாள சின்னத்தை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமயம்:
பீரங்கிகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஊரின் மையப்பகுதியில் உள்ள மலையில் காணப்படும் கோட்டை பழமையானதாகும். திருமயம் கோட்டை சுற்றுலா தலமாக காணப்படுகிற நிலையில் அதனை பார்வையிட பொதுமக்கள் அதிகம் பேர் வருகை தருகின்றனர். காதல் ஜோடிகளும் அதிக அளவில் வருகின்றனர். கோட்டையில் பழமையான பீரங்கிகள் 2 உள்ளன.
 ஒன்று மலையின் உச்சிக்கு செல்லக்கூடிய படிக்கட்டிற்கு முன்பாகவும், மற்றொன்று மலையின் உச்சியிலும் வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த பீரங்கி ஒரு அடையாள சின்னமாக கோட்டையில் மலையின் உச்சியில் காணப் படுகிறது. இந்த இடத்தில் இருந்து ஊரின் எழில்மிகு தோற்றத்தை நான்கு புறமும் கண்டு ரசிக்கலாம். பொதுமக்கள் பலர் இதன் முன்பு நின்று செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதும் உண்டு. செல்பி எடுத்தும் மகிழ்வார்கள்.
காதலர்கள் பெயர் பதிவு
இந்த நிலையில் மலையின் உச்சியில் உள்ள இந்த பீரங்கியில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதி கிறுக்கி வைத்து வருவது தொடர் கதையாக உள்ளது. அதில் உள்ள எழுத்துக்களை பார்த்தாலே தெரியும். தாங்கள் வந்து சென்றதற்கு ஒரு அடையாளமாக இந்த பீரங்கியில் தங்களது பெயர்களை காதலர்கள் எழுதி பதிவு செய்கின்றனர் போல. அதனால் காதலர்கள் பெயர்களை சுமந்து கொண்டு காணப்படும் பீரங்கியாக காட்சியளிக்கிறது. 
 பழமையான இந்த பீரங்கியின் மேல் எழுதவோ அல்லது கிறுக்கல்கள் செய்யவோ அனுமதிக்காத வகையில் தடுப்புகள் அமைத்து இதனை பாதுகாக்கவும், ஏற்கனவே எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை அழித்து விட்டு பராமரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருமயம் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story