மதனாஞ்சேரி, இளைய நகரம் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்படும் கதிர் ஆனந்த் எம்.பி. பேச்சு
மதனாஞ்சேரி, இளைய நகரம் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று கதிர் ஆனந்த் எம்.பி. தெரிவித்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி, இளைய நகரம் பகுதியில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கதிர் ஆனந்த் எம்.பி. கூறினார்.
தமிழக அரசு உத்தரவுப்படி கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பிரியதர்ஷினி ஞானவேலன், ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
இங்கு பேசிய பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரியும், சாலை வசதி வேண்டும் எனவும், ரேஷன் பொருட்கள் தரமாக வழங்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். குறிப்பாக மதனாஞ்சேரி, இளைய நகரம் பகுதியில் கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும், ஊத்துக்கொள்ளை பகுதியில் உள்ள தடுப்பணையை உயர்த்தி கட்டி அதன் மூலம் விவசாயிகளுக்கு பயன் அடைய வழி செய்யவேண்டும் என ஞானவேல் என்பவர் கேட்டார்.
மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் பிரச்சினையையும், விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்தித்தர நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் பேசி இந்த பகுதியில் தேவையான இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பேன். தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே உங்கள் பகுதி குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேண்டிய நிதிகளை ஒதுக்கி நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வாணியம்பாடி தாசில்தார் சம்பத், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ். சாரதி குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சாவித்திரி மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story