அரசு பஸ் மோதி தந்தை-மகன் பலி
தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.
கீழப்பழுவூர்,
அரசு பஸ் மோதல்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 74). இவரது மகன் வெங்கடேசன் (40). இன்று காலை தந்தையும், மகனும் திருமானூர் அருகே உள்ள சாலையோர பனை மரத்தில் நுங்கு வெட்டினர்.
பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வருவதற்காக தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே திசையில் தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
தந்தை-மகன் பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தியாகராஜன், வெங்கடேசன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதி தந்தை-மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story