நாமக்கல் மாவட்டத்தில், தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி 322 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் குப்பாண்டபாளையத்தில் கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில், தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி 322 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் குப்பாண்டபாளையத்தில் கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி நேற்று 322 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. குப்பாண்டபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டார்.
சிறப்பு கிராமசபை கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக்கூட்டம் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த வகையில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டு கூட்ட நடவடிக்களை பார்வையிட்டார். இக்கூட்டத்தில் நீடித்த, நிலைத்த வளர்ச்சியடைதலில் பொதுமக்களின் பங்களிப்பை வலியுறுத்தும் உறுதிமொழியை பொதுமக்கள் அனைவரும் ஏற்றனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:- கிராம சபைக்கூட்டம் என்பது கிராமங்களின் வளர்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பையும், வெளிப்படையான நிர்வாகத்தையும் மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இக்கூட்டங்களில் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கான திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து பணிகளிலும் பாலின வேறுபாடுகளின்றி ஆண்களும், பெண்களும் சரிசமமாக பங்கேற்க வேண்டும். தகுதியுடைய அனைவரும் சமூக பாதுகாப்புத்திட்டங்களின் மூலம் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பசுமைக்குடில்
கூட்டத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குப்பாண்டபாளையம் ஊராட்சியில் பசுமைக்குடில் அமைத்து பலன்தரும் சீதா, கொய்யா, கொடுக்காபுளி, புளியன், சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அசோகன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கலையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கொல்லிமலை
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் பைல்நாடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய அட்மா சேர்மன் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாநில அரசின் மூலமாக பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் குறித்தும், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் திட்டங்கள் குறித்தும் பேசினார். அதேபோல தின்னனூர் நாடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சாமிதுரை, துணைத் தலைவர் பழனியம்மாள் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள், மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அரியூர் நாடு ஊராட்சியில் உள்ள அரியூர் கஸ்பா மந்தைவெளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கீதா, ஊராட்சி செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அரியூர் கஸ்பா பகுதியில் அங்கன்வாடி மையம் பழுதடைந்து காணப்படுவதாகும் அதற்கு புதிதாக கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் சிறப்பு மகாசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்தது. நாமக்கல் மாவட்ட அரசு ஊராட்சி செயலாளர் மீராபாய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர் (பொது) சுந்தரம், ஊராட்சி அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story