காய்கறிகள் சாகுபடியில் தொடரும் சோகம்
உடுமலை பகுதியில் காய்கறிகள் சாகுபடியில் தொடரும் சோகத்தால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் காய்கறிகள் சாகுபடியில் தொடரும் சோகத்தால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலப்பயிர்கள்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்தின் காய்கறிகள் தேவையைப் பூர்த்தி செய்வதில் உடுமலை விவசாயிகள் பெரும்பங்கு வகிக்கிறார்கள். இந்த நிலையில் சமீப காலங்களாக காய்கறிகள் சாகுபடியில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
‘நீண்ட காலப் பயிர்களான கரும்பு, வாழை போன்றவற்றை விட குறுகிய காலத்தில் தொடர் வருமானம் தரக்கூடியது என்ற வகையில் காய்கறிகள் சாகுபடியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தானியங்கள் சாகுபடியைப் போல காய்கறிகள் சாகுபடியில் நடவு, களை எடுத்தல், அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு எந்திரங்களைப் பயன்படுத்த முடிவதில்லை. கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் உரிய பருவத்தில் அறுவடைப்பணிகள் மேற்கொள்ள முடியாமல் காய்கறிகள் வீணாகிறது.
மகசூல் பாதிப்பு
சமீப காலங்களாக மாறிவரும் பருவநிலையால் பெருமளவு காய்கறிகள் வீணாகி வருகிறது. கடும் வெப்பத்தால் காய்கறிகள் மகசூல் குறைந்து வந்தநிலையில் தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழை மற்றும் வேகமாக வீசும் காற்றால் பூக்கள் உதிர்வு, அழுகல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவரை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து வெறும் செடிகள் மட்டுமே நிற்கிறது. இதனால் முழுமையாக இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல மழையால் வெண்டைக்காய்கள் அதிக விறைப்புத் தன்மையுடன் இருப்பதால் விற்பனையாகாத நிலை உள்ளது.
அத்துடன் தற்போது காய்கறிகள் சாகுபடியில் போதிய விலையின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10-க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. இதுபோல தக்காளி, சுரைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். காய்கறிகளை இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கான குளிர்பதனக் கிடங்குகள், போதிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்'.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story