ராணிப்பேட்டை, ஆற்காட்டில் இறைச்சி கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
ராணிப்பேட்டை, ஆற்காட்டில் உள்ள இறைச்சி கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை, ஆற்காட்டில் உள்ள இறைச்சி கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மந்தாரை இலையில் இறைச்சி வாங்க செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இறைச்சி கடைகளில் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதுடன் பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு திடீரென்று சென்ற கலெக்டர் அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது சில கடைகளில் இறைச்சியை பிளாஸ்டிக் பைகளில் போட்டு கொடுப்பதை கண்ட அவர், பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் இறைச்சிக் கடைக்காரர்களை எச்சரிக்கை செய்தார். இனி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மந்தாரை இலைகளில்...
சில கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மந்தார இலையில் இறைச்சியை பார்சல் செய்து கொடுப்பதைக் கண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடம் இனி இறைச்சி வாங்க வரும்போது பாத்திரம் அல்லது துணிப் பைகளை கொண்டு வந்து வாங்கி செல்ல வேண்டும். அல்லது மந்தாரை இலைகளில் இறைச்சி வாங்கிச்செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் அடங்கிய போர்டையும் கடைகளில் தானே ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆற்காடு
ஆற்காட்டில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் கறி கடைகளிலும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தாமல் மந்தாரை இலைகளை பயன்படுத்தி வியாபாரம் செய்து கொண்டிருந்த கறிக் கடை உரிமையாளரை வெகுவாகப் பாராட்டினார்.
Related Tags :
Next Story