சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்
இணையதள ‘லிங்க்’-கை பலருக்கு அனுப்பினால் பரிசுப் பொருட்கள் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று போலீசார் ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்
இணையதள ‘லிங்க்’-கை பலருக்கு அனுப்பினால் பரிசுப் பொருட்கள் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று போலீசார் ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இணையதள ‘லிங்க்’
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, அனைத்து வயதினரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் ஆடியோ, வீடியோ மற்றும் செய்திகள் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியும் வருகிறது. இதனால் ஒரு சில மர்ம கும்பல் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி, நூதன மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தினமும் பாதிக்கப்படுவோர் ஏராளமானோர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செல்போன் வாட்ஸ்-அப்பில் ஒரு பிரபலமான தனியார் நிறுவனம் பெயரில் கிளை திறப்புவிழா பரிசு என்ற தலைப்பில் ஒரு இணையதள ‘லிங்க்’ வைரலாக பரவி வருகிறது. அந்த ‘லிங்க்’-கை திறந்து பார்த்தால் அதில் 4 கேள்விகள் உள்ளன. அந்த 4 கேள்விகளுக்கும் பதில் அளித்தால் ரூ.6 ஆயிரம் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பரிசு
இந்த ‘லிங்க்’-கை வாட்ஸ்அப்பில் பார்த்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கு அதை அனுப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மையான தகவல் இல்லை என்பது இன்னும் பலருக்கு தெரியவில்லை. இந்த நிலையில் அந்த ‘லிங்க்’ தொடர்பாக போலீஸ்காரர் ஒருவர் ஆடியோ பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார்.
அதில் இதுபோன்ற ‘லிங்க்’-கை 20 பேருக்கு அனுப்பினாலும், கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் பரிசு என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் லிங்க் மூலமாக யாருக்கும் இதுவரை எந்த பரிசுகளும் கிடைத்தது இல்லை.
போலீசார் விழிப்புணர்வு
அந்த லிங்கை திறந்து பார்க்கும் போது உங்கள் செல்போன்களில் உள்ள தனிப்பட்ட போட்டோ, வீடியோ மற்றும் செய்திகளை மொபைல் டேட்டா மூலமாக அவர்கள் எடுத்துக் கொள்ள முடியும். மேலும் அந்த போட்டோக்களை வைத்தோ அல்லது அதை மார்பிங் செய்தோ அதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களை மிரட்டவும், பணம் பறிக்கவும் முடியும். எனவே இலவசம் அல்லது பரிசு என்று வரும் எந்த லிங்கையும் பொதுமக்கள் திறந்து பார்க்க வேண்டாம்.
அதை மற்றவர்களுக்கு அனுப்பவும் வேண்டாம் என்று போலீஸ்காரர் அந்த ஆடியோவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வாக பேசி உள்ளார். இந்த ஆடியோவும் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. எது எப்படியோ சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படும் நன்மை, தீமைகளும் மற்றும் சாதகம் பாதகங்களும் நாம் அதை பயன்படுத்துவதை பொறுத்தே அமைகிறது.
Related Tags :
Next Story