வாக்குப்பெட்டிக்குள் பேனா மையை ஊற்றியவர் கைது
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலின் போது வாக்குப்பெட்டிக்குள் பேனா மையை ஊற்றியவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலின் போது வாக்குப்பெட்டிக்குள் பேனா மையை ஊற்றியவர் கைது செய்யப்பட்டார்.
சங்க தேர்தல்
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் சார்பில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. சாக்கோட்டை ஒன்றியம் நென்மேனி கண்மாய் பகுதிக்கான தலைவர் தேர்தல் அண்டக்குடி கண்மாய் பகுதிக்கான தலைவர் தேர்தல் ஆகியவை மித்ராவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோர் மேற்பார்வையில் நடை பெற்றது. வாக்கு எண்ணிக்கை காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
நென்மேனி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 99. ராமலிங்கம் பெற்ற வாக்குகள் 39,அவரை எதிர்த்து போட்டியிட்ட மாணிக்கவாசகன் பெற்ற வாக்குகள் 31. ராமலிங்கம் 8 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அண்டக்குடி கண்மாய் நீரினை பயன்படுத்துவோார் சங்க தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 97. கருங்கப்பன் பெற்ற வாக்குகள் 81. அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரியசாமி பெற்ற வாக்குகள் 13. செல்லாதவை 3. கருங்கப்பன் 68 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாக்குப்பெட்டிக்குள் பேனா மையை ஊற்றினார்
இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் அண்டக்குடியை சேர்ந்த பெரியசாமி என்ற வாக்காளர் வாக்குப்பெட்டிக்குள் பேனா மையை ஊற்றினார் அதனை கவனித்த தேர்தல் அதிகாரிகள் அதனை தட்டி விட்டனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் வாக்குப்பெட்டியில் பேனா மையை ஊற்றிய பெரியசாமி சாக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு காரைக்குடி தாலுகா அலுவலகம் கொண்டு வரப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்குப்பெட்டிக்குள் பேனா மை ஊற்றப்பட்டதால் பதிவான வாக்குச் சீட்டுகளில் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story