பெட்ரோல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு
பெட்ரோல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி,
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி சிவகாசியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.43-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகை பெட்ரோல்-டீசலுக்கு உயர்த்தப்பட்டது.
பெரும் பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் லிட்டர் 1-க்கு ரூ.111.83 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது ரூ.3.40 அதிகம் ஆகும். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலை தொற்றி உள்ளது.
நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.
தள்ளுவண்டி
மோட்டார் சைக்கிளில் சென்று வியாபாரம் செய்யும் பால்காரர், பழைய பொருட்கள் வாங்குபவர்கள், காய்கறி வியாபாரிகள், எண்ணெய் வியாபாரிகள், பாத்திர வியாபாரிகள் தற்போது பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாத்திர வியாபாரி சுந்தரம் கூறியதாவது:- பெட்ரோல் விலை உயர்வால் தினமும் வியாபாரத்துக்கு செல்லவே அச்சமாக உள்ளது. 1 லிட்டர் பெட்ரோல் ரூ.112-க்கு போட்டாலும் 40 கிலோ மீட்டர் மேல் சுற்ற முடியாது. இந்த 40 கிலோ மீட்டரில் எத்தனை பேர் வியாபாரம் செய்து விட போகிறார்கள்.
தினமும் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ரூ.150 செலவாகி விடுகிறது. இதை தவிர்த்து லாபம் பார்க்க வேண்டும். இப்படியே பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் இனி வரும் காலத்தில் தள்ளுவண்டிகளிலும், சைக்கிள்களிலும் தான் வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பெட்ரோல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story