உலக நன்மை வேண்டி பைரவருக்கு யாகம்


உலக நன்மை வேண்டி பைரவருக்கு யாகம்
x
தினத்தந்தி 25 April 2022 12:12 AM IST (Updated: 25 April 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் சிவன் கோவிலில் உலக நன்மை வேண்டி பைரவருக்கு யாகம் நடைபெற்றது.

தா.பழூர், 
தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உலக நன்மையை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. முதலில் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. கடத்தில் 64 பைரவ மூர்த்தங்களை ஆவாகனம் செய்து பல்வேறு திரவியங்களைக்கொண்டு யாகம் நடைபெற்றது. யாகத்தின் போது பல்வேறு உபசாரங்கள் செய்யப்பட்டன. வேள்வியில் ஆவாகனம் செய்யப்பட்ட தெய்வங்களை நோக்கி நாதஸ்வர, தவில் இசைகளை கொண்டு ஆராதிக்கப்பட்டது. பின்னர் மகா பூர்ணாகுதி செய்யப்பட்டது. கடம் புறப்பாடு செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோவில் பிரதட்சணம் செய்யப்பட்டு புனித நீரை கொண்டு வடுக பைரவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பைரவர் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். பைரவருக்கு வடைமாலை சாத்தப்பட்டது. மங்கள ஆரத்திக்கு பிறகு பக்தர்கள் கைகளில் மலர்கள் வழங்கப்பட்டன. பக்தர்களை உலக நன்மை மற்றும் சொந்த பிரார்த்தனைகளை வேண்டிக்கொள்ள செய்து பக்தர்களிடமிருந்து மீண்டும் மலர்கள் பெறப்பட்டு, வேண்டுதல் மலர்களை பைரவர் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பைரவ அஷ்டோத்திரம், சிவபுராணம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி வழிபட்டனர்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பின்னர் காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கைலாசநாதர் கோவில், காசி விசுவநாதர் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Next Story