2½ ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் நீச்சல் குளம்


2½ ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் நீச்சல் குளம்
x
தினத்தந்தி 25 April 2022 12:36 AM IST (Updated: 25 April 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பல லட்சம் செலவில் தொடங்கப்பட்ட நீச்சல்குளம் முறையான பராமரிப்பு இல்லாததால் 2½ ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இதனால் கோடைகால பயிற்சி பெறமுடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தில் பல லட்சம் செலவில் தொடங்கப்பட்ட நீச்சல்குளம் முறையான பராமரிப்பு இல்லாததால் 2½ ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இதனால் கோடைகால பயிற்சி பெறமுடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர்.

நீச்சல் குளம்

ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கின் எதிரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டது. இதற்கென தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு ஏராளமானோர் நீச்சல் பயிற்சி பெற்று வந்தனர். 
முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இந்த நீச்சல் குளம் அடிக்கடி மூடப்படுவதும் பின்னர் சிறிய மராமத்து செய்து திறக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. 
2½ ஆண்டுகளாக மூடி கிடக்கிறது
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலையடுத்து அனைத்து நீச்சல் குளங்களும் மூடப்பட்டன. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. 
ஆனால், ராமநாதபுரத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீச்சல் குளம் மட்டும் திறக்கப்படாமல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக முடங்கி மூடிக்கிடக்கிறது.

டைல்ஸ் தரைத்தளம் சேதம்

 இந்த நீச்சல் குளத்தில் உள்ள அனைத்து உபகரணங்கள், எந்திரங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன. நீச்சல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் தரை தளங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. தண்ணீரை மாற்றுவதற்கான எந்திரம் முழு அளவில் சேதமடைந்துள்ளது. குளோரினேசன் மையம் செயல்படவில்லை.. மின்மோட்டார்கள் பழுது பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள மோட்டார் அறைக்கு செல்லும் மின் வயர்கள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு ராமநாதபுரத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், நீச்சல் வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

சீரமைக்க நடவடிக்கை 

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:- 
நீச்சல்குளம் பராமரிப்பு குறித்து பொதுப்பணித்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் வந்து பார்வையிட்டு 19 ஆண்டுகளாகிவிட்டதால் அதனை முழுமையாக அகற்றி புதியதாக அமைக்க வேண்டும் என்று ரூ.45 லட்சம் திட்ட மதிப்பீடு வழங்கினர். இந்த மதிப்பீட்டினை கொரோனா காலம் என்பதால் நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு தற்காலிக சீரமைப்பிற்கு மதிப்பீடு செய்து அனுப்புமாறு அரசு தெரிவித்தது. இதன்படி தற்போது ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் திட்டமதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். நிதி வந்ததும் தற்காலிகமாக சீரமைத்து நீச்சல் குளம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story