தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 April 2022 12:37 AM IST (Updated: 25 April 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

தொற்றுநோய் பரவும் அபாயம் 
மதுரை மாவட்டம் 45-வது வார்டு என்.எம்.ஆர். மெயின் ரோடு காமராஜபுரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்  நிரம்பி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். 
அசோக், காமராஜபுரம்.
சாய்ந்த மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல்குளம் கிராமத்தின் தெற்கு தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்துள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் மின்வினியோகம் சரிவர வழங்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். சேதமடைந்து  சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், இனாம்கரிசல்குளம்.

நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர்ப்பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் நடக்கும் பொதுமக்களை இந்தப்பகுதியில் திரியும் நாய்கள் கடிக்க துரத்துகின்றன. இரவில் நாய்கள் கூட்டமாக கூடி சண்டையிடுவதால் ஏற்படும் சத்தம் காரணமாக மக்கள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
புவனேஷ், இளையான்குடி.

கழிவறை வசதி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு அமைந்துள்ள அக்னிதீர்த்தம், கீழவாசல் வடக்கு, தெற்கு வாசல் பகுதிகளில் பொதுகழிவறை வசதி இல்லை. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆண் மற்றும் பெண்களுக்கு என கழிவறை வசதியை அமைத்துதர வேண்டும்.
ஹரிதாஸ், ராமநாதபுரம். 

சேதமடைந்த சாலை
மதுரை மாவட்டம் 5-வது வார்டு மீனாம்பாள்புரம் வ.உ.சி. குறுக்கு தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பழுதடைந்த சாலையில் வாகனங்களை இயக்க முடிவதில்லை. சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மழைபெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறிவருகிறது.  அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பாஷா, மீனாம்பாள்புரம்.

மாணவர்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் ஆதிபட்டி-கோவிந்தநல்லூர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மோசமான சாலைவசதியால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
அந்தோணி, விருதுநகர்.

குப்பை அள்ளப்படுமா?
மதுரை மாவட்டம் ஆனையூர் 2-வது வார்டு மல்லிகா நகரில் குப்பை தொட்டி இல்லை. இதனால் இங்கு சாலையின் இருபுறமும் குப்பைகளை அதிக அளவில் கொட்டப்படுகிறது. தேங்கிய குப்பைகள் அள்ளப்படாமல் பலநாட்களாகி குப்பைமேடு போல காட்சியளிக்கிறது. போக்குவரத்திற்கும், சுகாதாரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்த குப்பைகளை அகற்றி இப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான்சன், ஆனையூர்.

Next Story