மக்கள் மனதில் மனிதநேயம் வளர வேண்டும்-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி


ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசுகிறார்.
x
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசுகிறார்.
தினத்தந்தி 25 April 2022 12:51 AM IST (Updated: 25 April 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் மனதில் மனிதநேயம் வளர வேண்டும் என ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கூறினார்.

பேராவூரணி:-

மக்கள் மனதில் மனிதநேயம் வளர வேண்டும் என ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கூறினார். 

பேராவூரணி கோர்ட்டு திறப்பு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டு திறப்பு விழா பட்டுக்கோட்டையில் நடந்தது. விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமை தாங்கி, பேராவூரணியில் உள்ள கோர்ட்டை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்து பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
தஞ்சை பெரிய கோவிலுக்கு நான் முதல் முறை வந்து பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் இந்த பகுதிக்கு வருவதற்கு ஏதாவது காரணம் கிடைக்காதா? என ஏங்குகிறேன். அந்த அளவிற்கு இந்த பகுதியின் கலாசாரமும், பண்பாடும் என்னை கவர்ந்துள்ளது. 

தயக்கமின்றி நிதி ஒதுக்கீடு

தமிழக அரசும், முதல்-அமைச்சரும் நீதித்துறை தொடர்பான பணிகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி நிதி ஒதுக்குவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீதியை தேடி மக்கள் அலையக்கூடாது, மக்களுக்கு அருகிலேயே நீதி கிடைக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதிதாக கோர்ட்டுகள் திறக்கப்படுகின்றன. 
நீதிமன்றங்கள் திறக்கப்படுவதால் சட்டப்பிரச்சினைகள் தீரலாம். ஆனால் மக்கள் மனங்களில் மனிதநேயம் வளரவேண்டும். அதற்கான காரணங்களை வக்கீல்களும், பொதுமக்களும் உருவாக்க வேண்டும். பார் கவுன்சிலின் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றி தருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

குறுகிய காலத்தில் சாதனைகள்

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேசுகையில், ‘ஐகோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே மிகச்சிறப்பான பல சாதனைகளை தலைமை நீதிபதி செய்துள்ளார். சென்னையில் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கு புதிய இடத்தை தேர்வு செய்து அதற்கான உத்தரவையும் முதல்-அமைச்சரிடம் பெற்றுள்ளார். 
வக்கீல்களுக்கு குடும்பநல சேமநிதியை ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக முதல்-அமைச்சர் உயர்த்தி உள்ளார். பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு லிப்ட் வசதி தேவை என்று இங்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கலெக்டரிடம் பேசி உள்ளேன். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக லிப்ட் வசதி ஏற்படுத்தப்படும்’ என்றார். 

ஐகோர்ட்டு நீதிபதிகள்

விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், பவானி சுப்பராயன், தமிழ்ச்செல்வி, எம்.எல்.ஏ.-க்கள் அசோக்குமார், அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராசு, பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், தி.மு.க. மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் செல்வராசு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story