385 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. காரிப்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டார்.
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. காரிப்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டம்
பஞ்சாயத் ராஜ் தினம் என்ற தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த தலைவர்கள் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும், மத்திய, மாநில அரசுகளால் கிராமப்புற மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதிதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கலெக்டர் பங்கேற்பு
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் காரிப்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையினை ஏற்படுத்திடும் வகையில் அதிகாரமிக்க இத்தகைய கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. காரிப்பட்டி ஊராட்சியில் சுகாதாரத்தை முழுமையாக கடைபிடித்து நோயற்ற கிராமமாகவும், சுத்தமான பசுமையான கிராமமாகவும், சமூக பாதுகாப்பு நிறைந்த கிராமமாகவும் விளங்கிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
இந்த கூட்டத்திற்கு அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வருகை புரிந்து இந்த பகுதியின் மேம்பாட்டிற்கு, என்னென்ன தேவைகள் என்பதை கேட்டறிந்துள்ளனர். மேலும், தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டு, திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. பஸ்கள் இப்பகுதியில் நிறுத்தி செல்ல வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் குறித்தும் மற்றும் முதியோர் உதவித்தொகை கோரி பல்வேறு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
வாழ்த்து மடல்
முன்னதாக தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் அனுப்பப்பட்ட வாழ்த்து மடல் பொதுமக்களுக்கு வாசித்து காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், கலால் உதவி ஆணையர் தனலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, காரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோசூரியன், அட்மா குழுத்தலைவர் விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story