சேலம்- சென்னை 8 வழிச்சாலையை செயல்படுத்த கூடாது
சேலம்- சென்னை 8 வழிச்சாலையை செயல்படுத்த கூடாது என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் கூறினார்.
சேலம்:-
விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் அழகாபுரத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் காவேரி தனபாலன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் தனசேகர், இளைஞரணி செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் காவேரி தனபாலன் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது விரைவு சாலை என்ற பெயரில் அதனை தி.மு.க. அரசு செயல்படுத்த முயற்சிப்பதாக தகவல் வருகிறது. எனவே சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது. அதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள 4 வழிச்சாலையை விரிவுபடுத்தலாம். மேட்டூர் காவிரி ஆற்றில் சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பதோடு, விவசாயிகளுக்கு மானியத்தில் டீசல் வழங்க வேண்டும். குழந்தைகளின் நலன் கருதி சத்துணவில் பால் வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story