நெல்லையில் கத்திக்குத்தில் காயம்: பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்ெதாகை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்
கத்திக்குத்தில் காயம் அடைந்து நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்
நெல்லை:
கத்திக்குத்தில் காயம் அடைந்து நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
பெண் சப்-இன்ஸ்பெக்டர்
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் சுத்தமல்லி அருகே உள்ள பழவூரில் நடந்த கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் திடீரென்று மார்க்ரெட் தெரசாவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நெல்லை பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மார்க்ரெட் தெரசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையும் அளிக்க உத்தரவிட்டார்.
அமைச்சர் வழங்கினார்
இந்த நிலையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் நேற்று மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு மார்க்ரெட் தெரசாவை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜகண்ணப்பன், மார்க்ரெட் தெரசாவிடம் வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா காயம் அடைந்த தகவல் கிடைத்த உடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினார். மேலும் அவர், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அவரது உத்தரவுப்படி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினோம்.
குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது
காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார். இது ஒரு விரும்பத்தகாத சம்பவம் ஆகும். எனினும் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது. போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க மன நல பயிற்சி வழங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர்-எம்.எல்.ஏ.
அப்போது, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட சூப்பிரண்டு சரவணன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தி.மு.க. நிர்வாகிகள் அண்டன் செல்லத்துரை, மூளிக்குளம் பிரபு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சாந்தாராம், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story