கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்; வெங்கையா நாயுடு பேச்சு


கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்; வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 25 April 2022 3:47 AM IST (Updated: 25 April 2022 3:47 AM IST)
t-max-icont-min-icon

கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

வெங்கையா நாயுடு பேச்சு

  கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். அவர் நேற்று பெங்களூரு ‘பிரஸ் கிளப்'பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

  அப்போது அவர் "நவீன இந்தியாவில் ஊடகங்களின் பங்கு" என்ற தலைப்பில் பேசுகையில் கூறியதாவது:-

  சிலர் கட்சி மாறுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். கட்சி தாவல் தடை சட்டத்தின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை. கட்சி மாற நினைப்பவர்கள் முதலில் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகு வேறு கட்சியில் சேர வேண்டும். மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும். அதனால் அந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வகையில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். இந்த கட்சி தாவல் தடை சட்டம் மக்கள் பிரதிநிதிகள் மொத்தமாக மாறுவதை அனுமதிக்கிறது.

6 மாதங்களில் தீர்ப்பு

  ஆனால் ஒருவர்-இருவராக கட்சி மாறுவதை அனுமதிப்பது இல்லை. அதனால் கட்சி மாறும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த சட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய தற்போது நேரம் வந்துள்ளது. கட்சி தாவல் தொடர்பான வழக்குகளில் கோர்ட்டுகள், சபாநாயகர்கள் விரைவாக முடிவு எடுக்காமல் அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருப்பது சரியல்ல.

  சில வழக்குகளில் முடிவு சரியான முறையில் எடுப்பது இல்லை. கோர்ட்டுகள், சில வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவடைந்த பிறகே தீர்ப்பு வழங்குகிறது. இத்தகைய கட்சி தாவல் வழக்குகளில் 6 மாதங்களில் தீர்ப்பு வழங்கும் வகையில் சட்டத்தில் கால நிர்ணயம் செய்ய வேண்டும். 3 மாதங்களில் தீர்ப்பு வழங்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து ஆகும். இத்தகைய வழக்குகளை அவ்வாறு முடித்துள்ளேன்.

நம்பகமான தகவல்கள்

  ஜனநாயக விருப்பங்களை பலப்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இன்று (நேற்று) பஞ்சாயத்து ராஜ் தினம். அனைத்துக்கட்சிகளும் பஞ்சாயத்து ராஜ் முறையை பலப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தில் மூன்றடுக்கு ஆட்சி நிர்வாக முறை உள்ளது. இதனை அனைவரும் மதித்து அவற்றை பலப்படுத்த வேண்டும். இது நாட்டு மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் ஆகும். அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி, நல்ல அதிகாரிகள் மற்றும் பணியாற்ற கூடியவர்களை நியமிக்க வேண்டும்.

  பத்திரிகை-ஊடகங்களில் செய்திகளுக்கும், கருத்துகளுக்கும் இடைவெளி இருக்க வேண்டும். இவை இரண்டும் ஒன்றாகிவிட்டால் நீதியை வழங்க முடியாது. நாம் ஜனநாயகத்தை பின்பற்றுகிறோம். இங்கு ஜனநாயகம் சரியாக பணியாற்றுவதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. இப்போது அனைத்து துறைகளிலும் தார்மிக தன்மை குறைந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் ஊடகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களை போய் சென்றடைய வேண்டும். அதனால் உறுதியான-நம்பகமான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக்கப்பூர்வமான அம்சங்கள்

  நாடாளுமன்ற கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை குழந்தைகள் உள்பட அனைவரும் கவனிக்கிறார்கள். அங்கு நடைபெறும் மக்களின் நலனுக்கு எதிரான நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதி ஒருவர் நல்ல முறையில் உரையாற்றினால் அதை ஊடகங்கள் வெளிப்படுத்துவது இல்லை. மக்கள் பிரதிநிதிகளின் நல்ல விஷயங்களையும் மக்களுக்கு காட்ட வேண்டும்.

  உறுப்பினர்கள் பேசுவதில் உள்ள ஆக்கப்பூர்வமான அம்சங்களை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தை முடக்கும் செயல்களை அதிகம் காட்டுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் உறுதி இல்லாத போலி செய்திகள் அதிகம் பகிரப்படுகின்றன. இத்தகைய போலி செய்திகளை திறமையான முறையில் கையாள நம்பகமான வழிகளை கண்டறிய வேண்டும். நீங்கள் தனிநபருடன் செயல்படுவது இல்லை.

உரிமை உள்ளது

  முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர், கவர்னரை சந்தித்து பேசுகிறீர்கள். இதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தவறு செய்தால் அதுபற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் இருக்கும் அமைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது. 

பாரபட்சமற்ற, உண்மையான தகவல்களை சொல்லும் நல்ல ஊடகங்கள் நமக்கு தேவை. வலுவாக, துடிப்பாக, சுதந்திரமாக செயல்படக்கூடிய ஊடகம் நாட்டிற்கு தேவை.
  இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
  இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு அவர் ஒரு மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார்.

Next Story