கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா
கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்தார்.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 4-ம் நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மதியம் 12 மணிக்கு திருச்சி ஆரியவைஸ்யாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.
அங்கிருந்து மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இன்று(திங்கட்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 26-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 27-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 28-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. 30-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே மாதம் 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
Related Tags :
Next Story