இந்தியாவிலேயே அதிக வழக்குகளை கையாளும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது


இந்தியாவிலேயே அதிக வழக்குகளை கையாளும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
x
தினத்தந்தி 25 April 2022 4:15 AM IST (Updated: 25 April 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே அதிக வழக்குகளை கையாளும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று நீதிபதி கூறினார்.

திருச்சி:

விருந்தினர் மாளிகை
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான விருந்தினர் மாளிகை கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட தலைமை நீதிபதி பாபு தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கலந்து கொண்டு விருந்தினர் மாளிகையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது;-
முன்னோடி மாநிலம்
திருச்சி சுத்தம் மற்றும் பாதுகாப்பான நகராகவும், தமிழகத்தின் இதயமாகவும், இணைப்பு நகராகவும் உள்ளது. சென்னை நீதிமன்ற விரிவாக்கத்திற்கு 4.28 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. திருச்சி பார் அசோசியேசன் 150-வது ஆண்டை கொண்டாடுகிறது. இந்தியாவிலேயே அதிக வழக்குகளை கையாளும் மாநிலமாக தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. அதிக வழக்குகளை கையாள்வதில் நீதிபதிகள் பங்களிப்பு மட்டுமல்ல, வக்கீல்களும் காரணம்.
அதிக வழக்குகளைத் தீர்ப்பதில் திருச்சி முதலிடத்தில் உள்ளது. நீதித்துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. நீதிமன்றங்கள் இல்லாத தாலுகாக்களில் நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சாமி தரிசனம்
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகர மேயர் அன்பழகன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாச்சலம் திட்ட அறிக்கை குறித்து விளக்கினார். முடிவில் நீதிபதி சாந்தி நன்றி கூறினார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், தலைமை அர்ச்சகர் உள்ளிட்டோரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story