குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி
குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.
சமயபுரம்:
பள்ளி மாணவிகள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை செங்குடி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். டிரைவர். இவரது மனைவி மாரியாயி. இவர்களுக்கு சத்யா(வயது 13) என்ற மகளும், தாமரைக்கண்ணன் என்ற மகனும் உள்ளனர். இதில் சத்யா திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவிகா. இவர்களுக்கு வசந்த் என்ற மகனும், தனுஷ்கா(14), அட்சயா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் தனுஷ்கா திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இரு குடும்பத்தினரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
குளிக்க சென்றனர்
இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்களது உடைகளை துவைத்து, குளித்து விட்டு வரலாம் என்று எண்ணி சத்யா, தனுஷ்கா, தாமரைக்கண்ணன் மற்றும் தனுஷ்காவின் உறவினரான லோகேஸ்வரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றனர். துணிகளை துவைத்துவிட்டு குளிப்பதற்காக குளத்தில் இறங்கிய சத்யா மற்றும் தனுஷ்கா ஆகியோர் வெகுநேரமாகியும் மேலே வராததால் அதிர்ச்சி அடைந்த தாமரைக்கண்ணன், லோகேஸ்வரி ஆகியோர் கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி சத்யா, தனுஷ்காவை தேடினர். அப்போது ஆழமான பகுதியில் இருந்து 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாவு
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாணவிகள் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story