ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
திருவண்ணாமலை
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் பிரதாப் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது புகார், கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தண்டராம்பட்டு தாலுகா வேப்பூர்செக்கடி காமராஜர் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வீட்டுமனை பட்டா வேண்டும்
நாங்கள் காமராஜர் நகரில் உள்ள ஏரி பகுதியின் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் பலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 14 குடும்பங்களை சேர்ந்த எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எங்கள் வீடுகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் இல்லை. ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி வீடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்நிலைக்கு எந்தவித தொடர்பும் இன்றி எங்களது வீடுகள் அமைந்துள்ளன. நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறோம். எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். எங்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story