மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவி


மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவி
x
தினத்தந்தி 25 April 2022 6:25 PM IST (Updated: 25 April 2022 6:25 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ரூ.12 லட்சம் கடன் உதவி

கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் மதிப்பிலான டாப்செட்கோ கடனுதவி, ஒருவருக்கு சலவை பெட்டி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சேகர், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், கூட்டுறவு வங்கி செயலாளர் கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story