பிர்லா கோளரங்கத்தில் நிழல் இல்லா நாளை உணர்ந்த மாணவர்கள்


பிர்லா கோளரங்கத்தில் நிழல் இல்லா நாளை உணர்ந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 25 April 2022 6:27 PM IST (Updated: 25 April 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பிர்லா கோளரங்கத்தில் நிழல் இல்லா நாள் நிகழ்ச்சியில் மாணவர்கள் தம்முடைய நிழல் பூமியில் விழாததை நேரடியாக அறிந்து வியந்து சென்றனர்.

நிழல் இல்லா நாள்

ஒரு குறிப்பிட்ட நாள் நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேலே இருக்கும். அப்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருப்பதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைத்தான் ‘நிழலில்லா நாள்' அல்லது ‘பூஜ்ஜிய நிழல் நாள்’ என்று அழைக்கிறார்கள். அந்தவகையில் நிழல் இல்லாத நாளாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை மாணவர்களும், பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஞ்ஞானி லெனின் தலைமையில் விஞ்ஞானிகள் நேற்று காலை 11.45 மணியிலிருந்து பகல் 12.15 மணி வரை சூரியனின் நிகழ்வுகளை கணக்கிட்டனர். அப்போது கோளரங்கம் வந்த மாணவர்கள் வட்டமாக நிற்க வைக்கப்பட்டனர். சரியாக பகல் 12.07 மணிக்கு தம்முடைய தலைக்கு மேல் சூரியன் வந்தபோது தமது நிழல் பூமியில் விழாததை மாணவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

தலைக்கு மேல் சூரியன்

இதுகுறித்து விஞ்ஞானி லெனின் கூறியதாவது:-

சூரியன் நம் தலைக்கு மேலே தினசரி வருவதாக நினைக்கிறோம். ஆனால் அது தவறு. ஆண்டுதோறும் ஏப்ரல் 24, ஆகஸ்டு 18 ஆகிய 2 நாட்களில் மட்டுமே சூரியன் மிகச்சரியாக நம் தலைக்கு மேலே வருகிறது. அந்த 2 நாட்களில் மட்டுமே நிழல் முழுவதுமாக மறையும். இந்த 2 நிழலில்லா நாட்கள்கூட கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் வரும். அதற்கு அப்பால், துருவப்பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வராது.

பூமத்தியரேகையின் வடக்கு அல்லது தென் துருவத்திலிருந்து சூரியனுக்கு உள்ள கோணத் தொலைவு, சூரியனின் சாய்வுத் தொலைவு என்று அழைக்கப்படுகிறது. எப்போது இந்த சாய்வுத் தொலைவு நம் பகுதியின் அட்சரேகையின் மதிப்புக்கு சமமாக உள்ளதோ, அப்போது சூரியனானது அப்பகுதியில் சிகர உச்சியை அடையும்.

இதனால் உருவாகும் நிழலானது அப்பொருளுக்கு அடியிலே சில மணித்துளிகள் நீடிப்பதால் நம்மால் அப்பொருளின் நிழலை காண இயலாது. இதை மாணவர்கள் அனுபவப்பூர்வமாக வியப்புடன் கண்டு களித்தனர்.

என்று அவர் கூறினார்.


Next Story