விளைச்சல்-வரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் நாட்களில் இன்னும் உயரும் வாய்ப்பு


விளைச்சல்-வரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் நாட்களில் இன்னும் உயரும் வாய்ப்பு
x
தினத்தந்தி 25 April 2022 7:31 PM IST (Updated: 25 April 2022 7:31 PM IST)
t-max-icont-min-icon

விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்தது. வரும் நாட்களில் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறி விலை உயர்வு

கடந்த மாதத்தில் காய்கறி விலை குறைந்து காணப்பட்டது. தற்போது காய்கறி வரத்து குறைய தொடங்கிய நிலையில் விலை சற்று அதிகரித்து உள்ளது. வரும் நாட்களில் இது இன்னும் உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-

தற்போது கோடை காலம் என்பதால் விளைச்சல் பாதித்ததின் எதிரொலியாக வரத்தும் சற்று குறைந்திருக்கிறது. இதனால் சில காய்கறி விலை லேசாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த வாரத்தை விட பீன்ஸ், தக்காளி விலை தலா ரூ.15-ம், வெண்டை, புடலங்காய், பீர்க்கங்காய், கேரட் விலை தலா ரூ.10-ம் உயர்ந்திருக்கிறது. இதர காய்கறி விலை ரூ.5 அதிகரித்துள்ளது.

கோடைகாலம் என்பதால் காய்கறி வரத்து இன்னும் குறையக்கூடும். அதேவேளை வரும் நாட்களில் சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால் தேவை காரணமாக காய்கறி விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை பட்டியல்

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)

பீன்ஸ்- ரூ.60 முதல் ரூ.65 வரை, அவரை- ரூ.45, பாகற்காய் (பன்னீர்) - ரூ.35, பாகற்காய் (பெரியது) - ரூ.35, கத்தரி-ரூ.30, வெண்டை-ரூ.50, புடலங்காய்-ரூ.40, சுரைக்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.30, பீட்ரூட்-ரூ.30, கேரட் (ஊட்டி) - ரூ.60, கேரட் (மாலூர்) - ரூ.35 முதல் ரூ.40 வரை, முள்ளங்கி- ரூ.20, முட்டைக்கோஸ்- ரூ.15, இஞ்சி- ரூ.50, சாம்பார் வெங்காயம் - ரூ.30, பல்லாரி வெங்காயம் (நாசிக்) - ரூ.20, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா) - ரூ.15, தக்காளி- ரூ.35, சேனைக்கிழங்கு- ரூ.30, சேப்பங்கிழங்கு- ரூ.40, காலிபிளவர் (ஒன்று) - ரூ.30 முதல் ரூ.40 வரை, முருங்கைக்காய்- ரூ.20 முதல் ரூ.25 வரை, உருளைக்கிழங்கு- ரூ.25 முதல் ரூ.30 வரை, எலுமிச்சை- ரூ.140 முதல் ரூ.150 வரை.


Next Story