கிணற்றில் மூழ்கி இறந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
கிணற்றில் மூழ்கி இறந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல்:
பரமத்தி அருகே கிணற்றில் மூழ்கி இறந்த மாணவரின் குடும்பத்திற்கு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மொத்தம் 255 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அந்த மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார்.
ரூ.1 லட்சம் நிவாரணம்
பின்னர் இந்த கூட்டத்தில் பரமத்திவேலூர் தாலுகா கூடச்சேரி கிராமத்தை சேர்ந்த மாணவன் நல்லுசாமி கிணற்றில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது தந்தை நாகராஜனிடம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை தாசில்தார் தேவிகா ராணி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story