தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பு


தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 April 2022 8:09 PM IST (Updated: 25 April 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சூரில் மழையால் மகசூல் அமோகமாக உள்ளதால், தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்தது. அங்கு தினமும் 25 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்யப்படுகிறது.

ஊட்டி

மஞ்சூரில் மழையால் மகசூல் அமோகமாக உள்ளதால், தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்தது. அங்கு தினமும் 25 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்யப்படுகிறது.

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இது தவிர ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.  விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சரிவர மழை பெய்யாமல், நீலகிரி மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவியது. இதனால் தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் இல்லை. இதன் காரணமாக தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.  

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தோட்டங்களில் பச்சை தேயிலை வளர தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

25 ஆயிரம் கிலோ

இது மட்டுமின்றி வறட்சி நிலவிய நாட்களில் மஞ்சூர் பகுதியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தினமும் 10 ஆயிரம் கிலோ முதல் 12 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பச்சை தேயிலை வரத்து இருந்தது. ஆனால் தற்போது தினமும் 20 ஆயிரம் கிலோ முதல் 25 ஆயிரம் கிலோ வரை பச்சை தேயிலை வரத்து உள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரம் அடைந்து உள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை பெய்யாமல் இருந்ததால் பச்சை தேயிலை மகசூல் இல்லை. தற்போது மழை பெய்ததால், தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்ததால், அதை பறித்து தொழிற்சாலைகளுக்கு அதிகளிவில் அனுப்பி வைக்கப்படுகிறது என்றனர்.


Next Story