ஓவியங்களில் வெளிப்படும் பழங்குடியினரின் வாழ்க்கை முறை
இயற்கை பொருட்களை கொண்டு இளைஞர்கள் வரைந்த ஓவியங்களில் பழங்குடியினரின் வாழ்க்கை முறை வெளிப்படுகிறது. அதை வாங்கி செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கோத்தகிரி
இயற்கை பொருட்களை கொண்டு இளைஞர்கள் வரைந்த ஓவியங்களில் பழங்குடியினரின் வாழ்க்கை முறை வெளிப்படுகிறது. அதை வாங்கி செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பாறை ஓவியங்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் இருளர் மற்றும் குறும்பர் இன பழங்குடி மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அங்குள்ள கரிக்கையூர் அருகே உள்ள பொறிவரை கிராமத்தில் சுமார் 100 மீட்டர் நீளமும், 80 அடி உயரமும் கொண்ட பிரமாண்ட பாறையில், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை வர்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன.
பண்டைய காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்வியல் முறைகள், கலாசாரம், உணவு முறை, வேட்டைக்கு செல்லுதல், கால்நடைகள் வளர்ப்பு, இசை கருவிகள் வாசிப்பு, ஆயுதங்கள் மற்றும் தொழில்கள் குறித்து இயற்கையாக தாவரங்கள், பூக்களில் இருந்து கிடைக்கும் சாயங்கள், பால் மற்றும் மண்ணை கொண்டு தத்ரூபமாக இந்த ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கிறன. இவை ஆண்டுகள் பல கடந்தும் கூட அழிந்து போகவில்லை. இந்த பகுதியை தடயவியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து உள்ளது.
மிகுந்த வரவேற்பு
இந்த பாரம்பரிய பாறை ஓவியங்களை வெளி உலகிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் பழங்குடியின இளைஞர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதாவது அந்த ஓவியங்களை போலவே காகிதங்களில் வரைந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
இதன் மூலம் கணிசமான வருவாயையும் ஈட்டி வருகின்றனர். இது தவிர காகிதத்தில் ஓவியங்களை வரைந்தாலும், இயற்கையில் கிடைக்கும் வேங்கை மரத்தின் பால், தாவரங்கள் மற்றும் பூக்களின் சாயங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியே வரைகின்றனர். இந்த இயற்கை ஓவியங்கள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.
ரசாயன பூச்சு இல்லை
இதுகுறித்து பழங்குடியின இளைஞர்கள் கூறியதாவது:- கரிக்கையூரில் உள்ள பாறை ஓவியங்களின் சிறப்பு குறித்து பலருக்கு தெரிவது இல்லை. அதில் பழங்குடியினரின் வாழ்க்கை முறை அடங்கி உள்ளது. இதை அனைவரும் தெரிந்துகொள்ள அந்த ஓவியங்களை காகிதத்தில் வரைந்து விற்பனை செய்கிறோம். அதற்கு கூட ரசாயன பூச்சுகளை பயன்படுத்துவது இல்லை. இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே அந்த ஓவியங்களை வரைகிறோம்.
இதை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் பழங்குடியினரின் வாழ்வியல் முறை அனைவரிடமும் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். பழங்குடியின இளைஞர்கள் வரையும் ஓவியங்களை நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத்தினர் குஞ்சப்பனை பகுதியில் உள்ள பழங்குடியினர் தயாரிப்புகள் விற்பனை மையத்தில் காட்சிபடுத்தி உள்ளனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஓவியங்களை விற்பனை செய்து, அதில் இருந்து கிடைக்கும் தொகையை இளைஞர்களுக்கு வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story