பெண் எம்.பி. கைது விவகாரத்தில் ‘24 மணி நேரத்தில் விளக்கம் அளியுங்கள்’- மராட்டிய அரசுக்கு, மக்களவை செயலகம் உத்தரவு
பெண் எம்.பி. கைது விவகாரத்தில் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு மராட்டிய அரசுக்கு மக்களவை செயலகம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
பெண் எம்.பி. கைது விவகாரத்தில் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு மராட்டிய அரசுக்கு மக்களவை செயலகம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் அடைப்பு
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்துத்வா கொள்கையை விட்டு விலகி செல்வதாக கூறி அவரது வீட்டின் முன் அனுமன் பஜனை பாட இருப்பதாக நடிகையும், அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யுமான நவ்நீத் ரானா, அவரது கணவர் ரவி ரானா எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்தனர். இதற்கு எதிராக கடந்த சனிக்கிழமை மும்பையில் அவர்களது வீட்டை சிவசேனா தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, நவ்நீத் ரானா, ரவி ரானா ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 2 பேர் மீதும் இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், போலீஸ் தடையை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைதான 2 பேரும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சபாநாயகருக்கு கடிதம்
இந்தநிலையில் நவ்நீத் ரானா எம்.பி. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையின் கீழ் சிவசேனா கட்சி இந்துத்வா கொள்கையில் இருந்து விலகி, மக்கள் தீர்ப்புக்கு துரோகம் செய்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. எனவே சிவசேனாவில் மீண்டும் இந்துத்வாவை ஒளிர வைக்க வேண்டும் என்பதற்காக தான் முதல்-மந்திரியின் வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்தேன். எந்த மத மோதலையும் தூண்டும் நோக்கில் இதை செய்யவில்லை. மும்பை போலீசார் என்னையும், எனது கணவரையும் கைது செய்தது சட்டவிரோதம். எனது பதவியை பொருட்படுத்தாமல் போலீஸ் நிலைய லாக்-அப்பில் அடைத்து வைத்தனர். எனக்கு குடிக்க தண்ணீர் கூட தரவில்லை. சாதி ரீதியாகவும் போலீசார் என்னை இழிவுப்படுத்தினர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் உத்தரவின் பேரில் தான் என் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மும்பை போலீஸ் கமிஷனர், சம்மந்தப்பட்ட துணை, உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
24 மணி நேரத்தில் விளக்கம் அளியுங்கள்
இந்தநிலையில் அவரது கடிதத்தை தொடர்ந்து மக்களவை செயலகம் மராட்டிய அரசுக்கு அதிரடியாக கடிதம் எழுதி விளக்கம் கேட்டு உள்ளது.
அதில், “நவ்நீத் ரானா எம்.பி.யின் கைது மற்றும் மும்பை போலீஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண் எம்.பி.யின் குற்றச்சாட்டு மற்றும் அதன் மீது மக்களவை செயலகம் உடனடியாக விளக்கம் கேட்டு இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--------------
Related Tags :
Next Story