பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு அனுப்பியது சரியல்ல; டி.கே.சிவக்குமார் கடும் தாக்கு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து ஆதாரம் ெவளியிட்ட பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு அனுப்பி வைத்திருப்பது சரியல்ல என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நோட்டீசு அனுப்பியது சரியல்ல
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. தனக்கு கிடைத்த சில ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். பிரியங்க் கார்கே காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. மட்டும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் செயதி தொடர்பாளரும் ஆவார். அதனால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் சார்பில் பிரியங்க் கார்கே பேசி வருகிறார்.
அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த பிரியங்க் கார்கேவுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருப்பது சரியல்ல. தலித் தலைவர்களில் பிரியங்க் கார்கேவும் ஒருவர் ஆவார். அவருக்கு நோட்டீசு அனுப்பி வைத்திருப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக, என்னை தொடர்பு கொண்டு தலைவர்கள் கூறியுள்ளனர்.
திவ்யா வீட்டில் சோதனை இல்லை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் குரல் எழுப்பினார்கள். அப்போது எந்த முறைகேடுவும் நடக்கவில்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறி விட்டார். தற்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுவை சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு கொடுத்துள்ளது. எதிர்க்கட்சியாக மாநிலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளையும் காங்கிரஸ் அம்பலப்படுத்தி வருகிறது. எங்களது குரலை அடக்க அரசு நினைக்கிறது.
இந்த முறைகேடுவுக்கு மூளையாக செயல்பட்ட பா.ஜனதா கட்சியை சேர்ந்த திவ்யா தலைமறைவாக உள்ளார். அவர் கைது செய்யப்படவில்லை. அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பவில்லை. அவரது வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை. பிரியங்க் கார்கேவுக்கு எதற்காக நோட்டீசு அனுப்ப வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவரை அலைக்கழிக்க வைப்பது அரசின் நோக்கம். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முறைகேடு, ஊழல் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் நடக்கிறது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story