முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 30 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சரால் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1,2022 (1-4- 2022) அன்று 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மற்றும் மார்ச் 31, 2022 (31-03-2022) அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2021-2022) அதாவது 1-4-2021 முதல் 31-3-2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்கவேண்டும். (சான்று இணைக்கப்படவேண்டும்).
சமுதாய நலனுக்காக
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வலர்களுடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட தேர்வுக்குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அதில் சிறப்பாக சேவை புரிந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே மாநில தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பங்கள் அனைத்தும் ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.goiv.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் வருகிற 10-5-2022 மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story