நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி தேரில் அமர்ந்து சென்ற கேங்மேன் படுகாயம் தேரிலும் தீப்பற்றியதால் பரபரப்பு
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி தேரில் அமர்ந்து சென்ற கேங்மேன் படுகாயம் தேரிலும் தீப்பற்றியதால் பரபரப்பு
நாமக்கல்:
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கேங்மேன் படுகாயம் அடைந்தார். தேரில் உள்ள துணியும் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சித்திரை திருவிழா
நாமக்கல்- –பரமத்தி சாலை இ.பி.காலனியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா பூச்சாற்றுதலுடன் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. 16-ந் தேதி மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியும், இரவு வடிசோறு பூஜையும் நடந்தது.
நேற்று காலையில் சாமி தேரில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சாமியை தேரில் வைத்து வீதி, வீதியாக கொண்டு சென்றனர். இவர்களுடன் மின்வாரிய கேங்மேன் குமரேசன் (வயது 27) உடன் சென்றார். தேர் மீது அமர்ந்திருந்த இவர் மின்சார வயர்களை கையால் தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.
கேங்மேன் படுகாயம்
அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் தேரில் உள்ள துணிகளும் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. உடனடியாக தீயை அணைத்த பொதுமக்கள் கேங்மேன் குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சாரத்தை ‘ஆப்’ செய்து இருந்த நிலையில், அங்கு எப்படி மின்வினியோகம் வந்தது என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் ஜெனரேட்டர் இயக்கியதால், மின்சப்ளை எதிர்திசையில் வந்ததா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மின்சாரம் தாக்கி தேரில் தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story