60 அடி உயர மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த தொழிலாளி
போடி அருகே 60 அடி உயர மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த தொழிலாளியை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.
போடி:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சோலையூர் என்ற மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நாகையா (வயது 62). விவசாய தொழிலாளி. இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் இலவ மரத்தின் மீது ஏறி இலவம் காய்களை பறித்து கொண்டிருந்தார். 60 அடி உயரமுள்ள அந்த மரத்தில் ஏறிய அவரால், மீண்டும் இறங்கி வர முடியவில்லை.
இதனால் தவித்த நாகையா, அக்கம்பக்கத்தினரை கூக்குரலிட்டு அழைத்தார். அப்போது அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மரத்தில் இருந்து இறங்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.
இதையடுத்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கயிறு கட்டி நாகையாவை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story