ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை கலைக்க தயார் - எச்.டி குமாரசாமி
தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து நிறைவேற்றவில்லை என்றால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை கலைக்கவும் தயங்கமாட்டேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கோலார்:
குமாரசாமி பேச்சு
கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் ஜனதா ஜலதாரே ரத யாத்திரை நடைபெற்றது. இதற்கிடையே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:-
கோலார் மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நான் முதல்-மந்திரியாக இருந்தபோது யரகோள் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். தற்போது 10 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனால் கோலார் மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஆளாகியுள்ளனர். ஜனதா தளம் (எஸ்) நெருக்கடி கொடுத்தால் தான் ஆளும் கட்சி ஒரு பணியை கையில் எடுக்கிறது. ஆனால் அதுவும் ஆமை வேகத்தில் தான் செயல்படுகின்றனர்.
கட்சியை கலைக்கவும் தயங்கமாட்டேன்
யாத்திரை நடந்தால் தண்ணீர் கிடைத்துவிடுமா என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். நான் சொன்னதை நிறைவேற்றுவேன். ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் நீர் வளத்துறை மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
எத்தினஒலே, மகதாயி, மேகதாது, கிருஷ்ணா மேல் அணை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். கிடப்பில் இருக்கும் கே.சி வேலி திட்டத்தின் மூலம் ஏரிகள் நிரப்பப்படும். இதுதவிர பஞ்சரத்னா திட்டம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வீடு, கல்வி, மருத்துவ வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகிய திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
இதனை நிறைவேற்ற மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வாய்ப்பளிக்கவேண்டும். ஒருவேளை ஆட்சிக்கு வந்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை கலைக்கவும் தயங்கமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதரிக்க கூடாது
இதற்கிடையே மைசூரு டவுன் சித்திக் நகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குமாரசாமி கலந்து கொண்டார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘கர்நாடகத்தில் சமீப காலமாக மத ரீதியிலான கலவரம், படுகொலை நிகழ்கின்றன. இதனால் மாநிலத்தில் அமைதி சீர்குலைந்து நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கெடுக்கும் யாரையும் மக்கள் ஆதரிக்க கூடாது' என்றார்.
Related Tags :
Next Story