தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி இலக்கை எளிதாக அடையலாம் மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி இலக்கை எளிதாக அடையலாம் என்று மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவை இணைந்து விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி கருத்தரங்கை நடத்தியது.
கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளிடையே கருத்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை முதலில் வெளிக்கொண்டு வர வேண்டும். தன்னம்பிக்கை ஒன்றுதான் தன்னை அடையாளப்படுத்தும் ஒரு ஆயுதமாகும். எனவே தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி இலக்கை எளிதாக அடையலாம்.
பள்ளிப்படிப்பிலிருந்து கல்லூரிக்கு செல்லும்போது எத்தகைய இலக்குடன் செல்கிறோம், அதனால் நாம் பெறும் பயன் என்ன என்பதை முடிவு செய்து பயணிக்க வேண்டும்.
லட்சியம்
ஒவ்வொரு மாணவருக்கும் உயர்கல்வி என்பது எளிதாக கிடைப்பது அல்ல, அதற்குப்பின்னால் அந்த பெற்றோரின் பங்களிப்பும், அந்த மாணவரின் முயற்சியுமே அவருக்கு கிடைக்கும் வெற்றியாகும். பள்ளிப்பருவத்தில் இருந்து மேல்நிலை இறுதிப்படிப்பு வரை நன்றாக படித்தால் பின்னர் பங்கேற்கும் எந்த போட்டித்தேர்வாக இருந்தாலும் எளிதாக வெற்றிபெற முடியும். அதன் மூலம் தான் நினைத்த பதவியை பெற்றிடலாம்.
இதற்கு அடிப்படையாக லட்சியம் ஒன்றை தனக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். லட்சியத்துடன் செயல்படும்போது எளிதாக வெற்றி கிட்டும். இதனால் நாம் பிறரை தேடும் நிலை மாறி, பிறர் நம்மை தேடி மதிக்கும் காலத்தை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
ஆகவே தற்போது விடுதியில் தங்கி ஏதோ பள்ளிப்படிப்பை முடிக்கிறோம், கல்லூரி படிப்பை முடிக்கிறோம் என்ற நிலையினை மாற்றி எதற்காக படிக்கிறோம், நமக்குள் என்ன லட்சியம், இதனால் பெற்றோருக்கு என்ன பெருமை என்பதை உணர்ந்து படித்து சாதிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் ஆலோசனை வழங்குவதற்கும், கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கும் அரசு தயாராக உள்ளது. ஆகவே இப்போதே படிக்கும் பருவத்திலேயே எதிர்காலத்தின் லட்சியத்தை பெற்றிட திட்டமிட்டு, செயல்பட்டு ஒவ்வொருவரும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குனர் ராஜேஷ்குமார், வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story