ஆசிரியரை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த கிராம மக்கள்


ஆசிரியரை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 25 April 2022 10:02 PM IST (Updated: 25 April 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே சரிவர பாடம் எடுக்காத ஆசிரியரை கண்டித்து கிராம மக்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே சரிவர பாடம் எடுக்காத ஆசிரியரை கண்டித்து கிராம மக்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். 
ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வாலிப்பாறை, தண்டியக்குளம், காந்திகிராமம், சின்னாநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 
இந்தநிலையில் அந்த பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர், மாணவ-மாணவிகளுக்கு சரிவர பாடம் கற்று தருவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே அவர் பள்ளிக்கு வருகை தருவதாகவும், இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அந்த ஆசிரியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி வாலிப்பாறை கிராம மக்கள் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
வெறிச்சோடிய வகுப்பறை
இதனால் ஆத்திரமடைந்த வாலிப்பாறை கிராம மக்கள் நேற்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. அதேபோல் மாணவர்களும் வகுப்பை புறக்கணித்தனர். இதன்காரணமாக பள்ளியில் வகுப்பறைகள் மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இதற்கிடையே மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு குறித்து அறிந்த வட்டார கல்வி அலுவலர் சரசுவதி, வாலிப்பாறை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் ஜான்செல்வராஜிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து புகார் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார கல்வி அலுவலர் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியரை மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்த பின்பு மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவதாக கூறிவிட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் வாலிப்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story