கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் தம்பதி தர்ணா வீடு வழங்கும் திட்டத்தில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு
வீடு வழங்கும் திட்டத்தில் மோசடி நடந்ததாக தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே ப.வில்லியனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் பிரவீண்ராஜ் (வயது 27). இவர் நேற்று காலை தனது மனைவி நந்தினி (20), மகன் கனிஷ்கா (1) ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று பிரவீண்ராஜிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு போராட்டத்தை கைவிட்ட அவர், இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், கடந்த 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசால் வழங்கப்படும் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டது. என்னைப்போன்று 20 பேருக்கும் வீடு ஒதுக்கப்பட்டது. எங்கள் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், எங்கள் காலனி பகுதியில் 20 வீடுகளையும் கட்டித்தருவதாக ஏற்றுக்கொண்டு எங்களிடம் இருந்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு,
வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை வாங்கினார். எங்கள் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட 40 மூட்டை சிமெண்டு, 320 கிலோ கம்பி மற்றும் முதல் தவணை தொகை ரூ.26 ஆயிரத்தை எங்களிடம் வாங்கிக்கொண்டு வீடு கட்டித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
இதனால் நாங்கள் இதுநாள் வரை வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். இதுபற்றி அவரிடம் சென்று கேட்டதற்கு வீடும் கட்டித்தர முடியாது, பணமும் தர முடியாது என்று எங்களை மிரட்டி வருகிறார்.
எனவே இந்த முறைகேடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு மோசடி செய்த அந்த நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story