நகை அடகுகடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி


நகை அடகுகடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 25 April 2022 10:22 PM IST (Updated: 25 April 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

அய்யலூரில், நகை அடகுகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை:

நகை அடகுகடை

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள கெங்கையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர், அய்யலூர் ரெயில்வே கேட் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு செந்தில்குமார் வீட்டுக்கு சென்று விட்டார். 

இந்தநிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவு 2 மணி அளவில் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கடையின் பின்புற சுவரை உளி, சுத்தியலை கொண்டு துளையிட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அய்யலூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சிலர் காய்கறிகளை இறக்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் சுவரை உடைக்கும் சத்தம் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 வாலிபர் சிக்கினார்
இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, அடகு கடையில் நகைகளை அள்ளி செல்லும் நோக்கத்தில் 3 பேர் சுவரை துளையிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். 
சிறிதுநேரத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு வடிவேல் ஆகியோர் அங்கு விரைந்தனர். போலீசாருடன் சேர்ந்து, சுமை தூக்கும் தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் நகை அடகு கடை நோக்கி சென்றனர்.

ஆட்கள் வருவதை அறிந்த 3 பேரும், சுவரை துளையிடுவதை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசாரும், பொதுமக்களும் அவர்களை விரட்டி சென்றனர். இதில், வாலிபர் ஒருவர் சிக்கி கொண்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது 

 விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வளையபட்டியை சேர்ந்த மாணிக்கம் (25) என்று தெரியவந்தது. தப்பியோடிய 2 பேரும், அய்யலூர் அருகே உள்ள வேங்கனூரை சேர்ந்த கணேசன் (23), அழகுபாண்டி (23) என்று தெரியவந்தது. 

அடகு கடையின் சுவரை துளையிட்டு நகைகளை கொள்ளையடிக்க அவர்கள் முயன்றுள்ளனர். இதற்கிடையே அய்யலூர் அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த கணேசன், அழகுபாண்டியை போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 

அடகு கடையின் சுவரை நள்ளிரவில் துளையிட்டு, நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அய்யலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story