பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 25 April 2022 10:27 PM IST (Updated: 25 April 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடந்தது. 
கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 20 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித் தொகை கோரி 15 மனுக்கள் மற்றும் பல்வேறு உதவிகள் கோரியும், புகார்கள் தொடர்பாகவும் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 165 மனுக்கள் பெறப்பட்டன. 
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
நலத்திட்ட உதவிகள்
அதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை சார்பாக அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 54 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 650 மதிப்பில் விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். 
ரூ.25 லட்சத்திற்கான காசோலை
மேலும் மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் அழகர் என்பவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு இறந்ததையடுத்து, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை அவரது மனைவி மணிமேகலையிடம் கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் கலால் நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Next Story