திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறை தீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர். கூட்டத்தில் 295 மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்கள் வழங்கிய மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவி
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 12 நபர்களுக்கு செயற்கை கால்கள், ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் (வயது 22) என்பவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரியினால் இயங்கும் சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார்,
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
மொளகரம்பட்டி பகுதியை சேர்ந்த திருப்பதி அவரது மனைவி, 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்தார். அப்போது அவர் தான் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெய்யை அனைவரின் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
திருப்பதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பதியின் நிலத்தை அளவீடு செய்ய அவரது அண்ணன் இடையூறு ஏற்படுத்தி வந்ததாகவும் இதனால் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை டவுன் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பினர்.
இதேபோல் முனியம்மாள் என்ற மூதாட்டி கலெக்ரிடம் அளித்துள்ள மனுவில் தனக்கு சொந்தமான வீட்டை மகள், அவரது கணவர் அபகரித்து கொண்டதாகவும், எனக்கு வரும் வாடகை பணத்தையும் தற்போது அபகரித்து கொள்வதாக கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story