ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து


ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 25 April 2022 10:47 PM IST (Updated: 25 April 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.
துணிக்கடை
நாகர்கோவில் செட்டிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லிஜின் (வயது 30). இவர் பீச்ரோடு சந்திப்பில் உள்ள 3 தளம் கொண்ட ஒரு வாடகை கட்டிடத்தில் சப் ஜெயில் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது ஜவுளிக்கடை முதல் தளத்திலும், 2-ம் தளத்தில் ஒரு தனியார் வங்கியும் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் லிஜின், துணிக்கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கடையில் இருந்து புகை மூட்டம் கிளம்பியது. இதை பார்த்த பொதுமக்கள், லிஜினுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி பெனட்தம்பி தலைமையில் வீரர்கள் வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீ விபத்து- துணிகள் நாசம்
அப்போது கடையின் வெளி பகுதியில் லேசாக தீ பரவியது. உடனே கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கடையில் இருந்த துணிகளில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் கடையில் இருந்த துணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்களின் சாமர்த்தியத்தாலும், சரியான நேரத்திலும் தீ அணைக்கப்பட்டதாலும், மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் 2-வது தளத்தில் உள்ள வங்கிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் துணிக்கடையை சுற்றியுள்ள மற்ற கடைகளிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாகி இருப்பதாக கூறப்படுகிறது.  
 விசாரணை- பரபரப்பு
தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஏராளமான பொதுமக்கள், கடைக்காரர்கள் அந்த பகுதியில் திரண்டதால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கருதுகிறார்கள். இருப்பினும் வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
இதற்கிடையே தீ விபத்து நடந்த ஜவுளிக்கடையை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா ஆகியார் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Next Story