கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு ஓடும் அரசு பஸ்சில் கண்டக்டரை தாக்கிய பள்ளி மாணவன் சீருடை அணியாமல் வந்தவரிடம் டிக்கெட் கேட்டதால் ஆத்திரம்


கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு ஓடும் அரசு பஸ்சில் கண்டக்டரை தாக்கிய பள்ளி மாணவன்  சீருடை அணியாமல் வந்தவரிடம் டிக்கெட் கேட்டதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 25 April 2022 10:53 PM IST (Updated: 25 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே ஓடும் அரசு பஸ்சில் டிக்கெட் கேட்ட கண்டக்டரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி

அரசு பஸ்

பகண்டை கூட்டுரோட்டில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் அரசு பஸ் ஒன்று பெருவங்கூர் வழியாக கள்ளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பலர் பயணம் செய்தனர். 

அப்போது நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் பெருங்கூர் கிராமத்தை சேர்ந்த மாணவர் வண்ண ஆடை அணிந்து பயணம் செய்தார். அவர் மாணவர் என்பது தெரியாமல் அவரிடம் கண்டக்டர் வேல்முருன் டிக்கெட் கேட்டார். அதற்கு மாணவன் நான் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறேன் என்னிடம் டிக்கெட் கேட்கிறீர்கள் என்றார். இதனால் அவர்கள் இருவருக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

கண்டக்டரை தாக்கினார்

இந்த நிலையில் சாமியார்மடம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது அந்த மாணவன் கண்டக்டர் வேல்முருகனை திடீரென தாக்கிவிட்டு இறங்கி ஓடினான். உடனே டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் சிலர் பின்னால் துரத்தி சென்று அந்த மாணவனை பிடித்து இழுத்து வந்தனர். இதைப்பார்த்து பஸ்சில் வந்த பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இது பற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் சுமார் 30 நிமிட தாமதத்துக்கு பிறகு அரசு பஸ் அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றது. ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story