அம்மன் வேடம் அணிந்து வந்து நாட்டுப்புற கலைஞர் மனு


அம்மன் வேடம் அணிந்து வந்து நாட்டுப்புற கலைஞர் மனு
x
தினத்தந்தி 25 April 2022 10:58 PM IST (Updated: 25 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

கலை சுடர்மணி விருது வழங்கக்கோரி அம்மன் வேடம் அணிந்து வந்து நாட்டுப்புற கலைஞர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

திண்டுக்கல்:

குறைதீர்க்கும் கூட்டம் 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் சாணார்பட்டி ஒன்றியம் கூவனூத்தை சேர்ந்த பெண்கள் இலவசமாக வீட்டு மனை கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனால் சொந்த வீடு கூட இல்லாமல் சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு அரசு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும், என்றனர்.

இழப்பீடு கேட்டு மனு

நத்தம் தாலுகா குடகிபட்டியை அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் இழப்பீடு கேட்டு மனு கொடுத்தார். அந்த மனுவில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடகிபட்டி அய்யனார் அருவிக்கு செல்லும் பாதையின் அருகே நான் சென்று கொண்டிருந்தேன். 

அப்போது காட்டெருமைகள் என்னை முட்டி தாக்கின. இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் 8 மாதம் சிகிச்சை பெற்றேன். எனினும் என்னால் சராசரி வாழ்க்கையை வாழமுடியவில்லை. இதனால் இழப்பீடு கேட்டு வனத்துறையினரிடம் மனு கொடுத்தும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே எனக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

சின்னபள்ளப்பட்டியை சேர்ந்த நாட்டுப்புற நடன கலைஞர் கருப்பையா, அம்மன் வேடம் அணிந்து வந்து மனு கொடுத்தார். 

அந்த மனுவில், பாரம்பரிய கலைகளின் மீதான ஆர்வத்தில் நான் கடந்த 20 ஆண்டுகளாக கலை பணி செய்து வருகிறேன். அரசு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கரகம், சாமி வேடங்கள் அணிந்தும் பங்கேற்று உள்ளேன். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட கலை மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். எனினும் இதுவரை விருது கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் விருதுக்கு விண்ணப்பித்து இருந்தேன். அதுவும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. எனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து கலை சுடர்மணி விருதுக்கு என்னை தேர்வு செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார்.

Next Story