கடலூரில் மாணவர்கள் மோதல்


கடலூரில் மாணவர்கள் மோதல்
x
தினத்தந்தி 25 April 2022 11:02 PM IST (Updated: 25 April 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஒரு பள்ளியில் கெத்து காட்டுவதில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கடலூர், 

கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்ததும், அங்கு படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 40 பேர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மாணவர்களை தடுக்க முயன்றனர். இருப்பினும் மாணவர்கள் பொதுமக்களை கண்டுகொள்ளாமல் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர்.

கெத்து காட்டுவதில் போட்டி 

போலீசாரை கண்டதும், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடினர். இதில் ஒரு மாணவர் தான் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஓடினார். 
இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார்?, அவர்கள் எதற்காக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்? என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த சில நாட்களாக பள்ளிக்கூடத்தில் கெத்து காட்டுவதில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்ததும், இது தொடர்பாக 2 வகுப்பு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்ததும், இது முற்றி மோதலாக மாறி இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட 10 மாணவா்கள் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story