பாப்பாரப்பட்டி அருகே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாக கூறி தார் தொழிற்சாலைக்கு சீல் அதிகாரிகள் நடவடிக்கை
பாப்பாரப்பட்டி அருகே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாக கூறி தார் தொழிற்சாலைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பாப்பாரப்பட்டி, ஏப்.26-
பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிலியனூர் கிராமத்தில் அ.தி.மு.க. விவசாய பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன் மகன் அருணுக்கு சொந்தமான தார் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதன் அருகில் குடியிருப்புகள், அரசு பள்ளிகள் உள்ளன. இந்த தார் பிளாண்டில் இருந்து புகை வெளியேறுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கிராமமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவின் பேரில் மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆய்வு முடிவுகளை வைத்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி மாசு ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த தார் தொழிற்சாலையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மாலை சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் சிவரஞ்சனி, பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார் ஆகியோர் தார் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருண் மற்றும் அவரது தாயார் ரத்னா ஆகியோர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் தலைமையில் பாப்பாரப்பட்டி போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story