தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்க நடவடிக்கை கலெக்டர் திவ்யதர்சினி தகவல்


தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்க நடவடிக்கை கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
x
தினத்தந்தி 25 April 2022 11:03 PM IST (Updated: 25 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

தர்மபுரி:
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
தீர்த்தமலை மலைக்கோவில்
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை ஊராட்சியில் உள்ள பழமை வாய்ந்த தீர்த்தகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் திவ்யதர்சினி ஆய்வு செய்தார். மலைக்கோவிலுக்கு அனைத்து துறை அலுவலர்களுடன் மலைப்பாதையில் நடந்து சென்ற கலெக்டர், மலையில் இருந்து கீழே வந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டார். மேலும் மலைக் கோவிலுக்கு அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
சிவதலங்களில் சிறப்பு பெற்ற கோவில்களில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்றது தீர்த்தகிரீஸ்வரர் கோவில். இந்த மலைக்கு ஏறிச்செல்ல வசதியாக ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மலையேறும் படிகளில் இடையிடையில் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்கு குறைந்தது 3 கழிப்பறை வசதியுடன் சுடிய ஓய்வு எடுத்து செல்லும் அறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, உடை மாற்றும் அறை ஆகியவை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ரோப்கார் அமைக்க நடவடிக்கை
இந்த பணிகளை சுற்றுலாத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, திட்ட மதிப்பீடுகளை தயார் செய்து வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. திட்ட மதிப்பீடுகள் கிடைக்க பெற்றவுடன் அந்தந்த துறைகளின் மூலம் நிதி பெறப்பட்டு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளிகள், வயதான முதியோர் மற்றும் பக்தர்கள் தீர்த்தகீரிஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வசதியாக ரோப்கார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அரசுக்கு திட்ட மதிப்பீடுகள் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் முத்தையன், தாசில்தார் கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், செயல் அலுவலர் சரவணன், தீர்த்தமலை ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story