மனநலம் பாதிக்கப்பட்டு நினைவு திரும்பிய ஒடிசா மாநில இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதிக்கப்பட்டு நினைவு திரும்பிய ஒடிசா மாநில இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிந்தார். அவரை போலீசார் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனை மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைக்கு பிறகு அவருக்கு நினைவு திரும்பியது.
விசாரணையில் அந்த பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி என்றும், ரெயில் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து, நடந்தே ராணிப்பேட்டை பகுதிக்கு வழிதவறி வந்ததும் தெரியவந்தது.
அவர் தெரிவித்த முகவரியின் அடிப்படையில் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், அந்த பெண்ணுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் லட்சுமணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், வாலாஜா அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் உஷா நந்தினி, டாக்டர்கள் தினேஷ்பாபு, சிவாஜிராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story