பார்த்தால் சிலை தொட்டால் மனிதன்


பார்த்தால் சிலை தொட்டால் மனிதன்
x
தினத்தந்தி 25 April 2022 11:31 PM IST (Updated: 25 April 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் பார்த்தால் சிலை அருகில் சென்று ெதாட்டுபார்த்தால் மனிதன் என்பது தெரிந்தது.

திருப்பூர்
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் பார்த்தால் சிலை அருகில் சென்று ெதாட்டுபார்த்தால் மனிதன் என்பது தெரிந்தது.
சிலை போல 
திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் நடந்த ஒரு சம்பவத்தால் பரபரப்பாக காணப்பட்டது. அந்த வீதி வழியாக சென்றவர்களில் சிலர் ‘அம்மா இங்க பாருமா... தங்க சிலை’, ‘ஏய் என்னடி ரோட்டுல புதுசா சிலை வச்சிருக்காங்க’, ‘மாப்ள இது சிலையா இல்ல மனுசனாடா’ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறியபடி சென்றனர். இதற்கெல்லாம் காரணம் அங்கு ஒருவர் ஆடாமல் அசையாமல் அச்சு அசல் சிலை போல நின்று கொண்டிருந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பாபுகுமார் என்ற அந்த வாலிபர் தங்க நிறத்திலான உடையை அணிந்து கொண்டு உடம்பில் தங்க நிறத்தை பூசியிருந்தார். தலையில் தொப்பி கண்ணில் கூலிங் கிளாசுமாக உண்மையான சிலைபோல் அந்த வாலிபர் நின்றதால் அவ்வழியாக சென்றவர்கள் விளம்பரத்திற்காக பொம்மை வைக்கப்பட்டுள்ளதாக நினைத்தனர். 
சிறுவர், சிறுமிகளும், பெண்களும் இவரை வியப்புடன் பார்த்து சென்றனர். ஒரு சிலர் சந்தேகத்தில் அருகில் சென்று பார்த்த பின்னரும், சிலை என நம்பி ஏமாந்து சென்றனர். ஆனாலும் ஒரு சிலர் எங்களை யாரும் ஏமாத்த முடியாது என்பது போல இந்த வாலிபரை வைத்த கண் வாங்காமல் நோட்டமிட்டு சிலை இல்லை என்பதை கண்டுபிடித்து விட்டனர். இதை அறிந்து கொண்டவர்களில் பலர் இந்த வாலிபருடன் நின்று செல்போனில் செல்பி படம் எடுத்துகொண்டனர். 
பணம் சம்பாதிப்பதும்  திறமை 
குறிப்பாக இளம் பெண்களும், வாலிபர்களும் அதிக அளவில் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதேபோல் இவ்வழியாக சென்ற பலர் வாலிபர் அருகில் இருந்த டப்பாவில் தங்களால் இயன்ற பணத்தை போட்டுவிட்டு சென்றனர். இதனால் இந்த வாலிபருக்கு பணமும் ஓரளவு வசூல் ஆகியது. பலர் ஓடி, ஓடி உழைக்கும் நிலையில் ஆடாமல் அசையாமல் பணம் சம்பாதிப்பதும் ஒரு திறமை தானோ?.

Next Story